search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாளை மத்திய சிறை"

    • கம்பி வலையின் உள்ளே நின்று கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்தபடி போனில் பேசும் வகையில் பாளை மத்திய சிறையில் இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • கைதிகள் பகுதி மற்றும் உறவினர்கள் பகுதிகளில் தலா 26 இன்டர்காம் இணைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதியாக சுமார் 1353-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    சிறையில் இருக்கும் இந்த கைதிகளை சந்திக்க அவர்களின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படையில் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர 5 நாட்கள் அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    அப்போது கைதிகள் ஒரு புறமும், அவர்களது உறவினர்கள், வக்கீல்கள் மற்றொரு புறமும் நின்று பேசுவார்கள். அதில் அவர்களுக்கு இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால், இருதரப்பினரும் அதிக சத்தத்துடன் பேசுவார்கள். இதனால் சரியாக கேட்கமுடிவதில்லை என்று கைதிகளின் உறவினர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பேசும் நிலை இருந்தது.

    எனவே கம்பி வலையின் உள்ளே நின்று கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்தபடி போனில் பேசும் வகையில் பாளை மத்திய சிறையில் இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்காக கைதிகள் பகுதி மற்றும் உறவினர்கள் பகுதிகளில் தலா 26 இன்டர்காம் இணைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு இடையே கண்ணாடி அறை போன்று உருவாக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமிராக்களும் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த அறையானது இன்று காலை திறக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கலந்து கொண்டு அறையை திறந்து வைத்து, இன்டர்காம் வசதியை தொடங்கி வைத்தார். கூடுதல் சிறை சூப்பிரண்டு வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதன் மூலம் இனி சத்தமாக பேச வேண்டிய தேவை இருக்காது. கைதிகள் தங்களது உறவினர்களிடம் தெளிவாக பேசலாம். தமிழகத்தில் சென்னை புழல், கோவை, வேலூர், மதுரை மத்திய சிறைகளை தொடர்ந்து நெல்லை மத்திய சிறைக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ×